சிதம்பரம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 47). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கும், இவரது டிரைவரான ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த சண்முகபிரகாஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சிதம்பரம் அண்ணாமலை நகர் கூத்தங்கோவில் புறவழிச்சாலையில் பழனிசாமி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சண்முகபிரகாஷ் அந்த பகுதிக்கு நாகை மாவட்டம் மாங்கணம்பட்டு பகுதியை சேர்ந்த ஹர்சத் அலி (25), ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த மாரியப்பன், மனோஜ் ஆகியோருடன் வந்தார். பழனிச்சாமியை 4 பேரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தனர்.
பின்னர் சண்முகபிர காஷ், ஹர்சத்அலி உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் ஹர்சத்அலி மீது ஆனைக்காரன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. தொடர்ந்து அவர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் உத்தரவுப்படி ஹர்சத்அலி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.