செய்திகள்

சிதம்பரம் அருகே தனியார் பஸ் வயலில் பாய்ந்தது: 13 பயணிகள் படுகாயம்

Published On 2017-12-21 10:58 GMT   |   Update On 2017-12-21 10:58 GMT
தனியார் பஸ் வயலில் பாய்ந்ததில் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிதம்பரம்:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இன்று காலை 11.30 மணிக்கு சிதம்பரம் அருகே வயலூர் புறவழிச் சாலையில் அந்த பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது சிதம்பரத்தில் இருந்து கீரப்பாளையம் நோக்கி ஒரு மாருதி கார் சென்றது.

புறவழிச்சாலையில் வந்து போது காரும், பஸ் சும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது போல் இருந்தது. இதையறிந்த பஸ் டிரைவர் கார் மீது மோதாமல் இருக்க பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையை விட்டு கீழே இறங்கி வயல்வெளியில் பாய்ந்தது.

அப்போது பஸ் அங்கு மிங்குமாக ஆடியது. இதனால் பயணிகள் கூச்சலிட்டனர். பஸ் குலுங்கியதில் பஸ்சின் கம்பி மற்றும் சீட் பகுதிகளில் இடித்து குருசாமி, அவரது மனைவி வசந்தா, அமராவதி, ராமசாமி உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News