கார் மோதியது தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் படுகாயம்
ஈரோடு:
ஈரோடு சிந்தானந்த நகரை சேர்ந்தவர் முகமது ரசூல் (வயது 25). இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் ஈரோடு சங்குநகரை சேர்ந்த சுமிதா என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை முகமதுரசூல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து கொண் டிருந்தார்.
அவருடன் சுமிதாவும் வந்தார். வண்டியை முகமது ரசூல் ஓட்ட பின்னால் சுமிதா உட்கார்ந்து வந்தார்.
குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது முகமதுரசூல் பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி முகமது ரசூல், சுமிதா இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.