செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே மணல் குவாரிக்கு சென்ற வாலிபர் மரணம் உறவினர்கள் போராட்டம்

Published On 2017-12-20 10:30 GMT   |   Update On 2017-12-20 10:30 GMT
மணல் குவாரிக்கு சென்ற வாலிபர் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபிரபு (வயது 27), கூலித்தொழிலாளி. இவர் கொள்ளிடம் ஆற்று பகுதியில் உள்ள மணல் குவாரிக்கு சென்றார்.

வெகு நேரமாகியும் ஆனந்தபிரபு வீடு திரும்பாததால் அவரைதேடி உறவினர்கள் குவாரிக்கு வந்தனர். அப்போது லாரி மணல் ஏற்றிச்செல்லும் பாதையில் ஆனந்த பிரபு உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குமராட்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து ஆனந்தபிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் ஆனந்த பிரபு சாவுக்கான காரணம் தெரியும்வரை உடலை எடுக்க விடமாட்டோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார் கோவில் தாசில்தார் ஜெயந்தி, சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் மணல் குவாரியை மூட வேண்டும், ஆனந்தபிரபு சாவுக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யவேண்டும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உங்களது கோரிக்கையை நிறை வேற்றுவோம் என்று போலீசார் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து ஆனந்தபிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்தபிரபுவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு அவரது உறவினர்கள் அனுமதிக்க வில்லை. தொடர்ந்து 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்தபிரபு வாகன விபத்தில் இறந்தாரா? அல்லது கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News