செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு மணல் குவாரியில் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

Published On 2017-11-18 10:35 GMT   |   Update On 2017-11-18 10:35 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை மணல்குவாரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கள்ளிப்பாடி வெள்ளாற்றில் அரசு மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துசெல்லப்படுகிறது.

இந்தநிலையில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மழை பெய்த தால் கடந்த 15 நாட்களாக குவாரியில் மணல் எடுக்க லாரிகளை அனுமதிக்கவில்லை. நேற்று முதல் மணல்குவாரி வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.

இந்தநிலையில் இன்று காலை மணல் எடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட லாரிகள் குவாரியில் காத்து நின்றன. அப்போது ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பூண்டிகிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை மணல்குவாரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் லாரிகள் மணல் ஏற்றி வரமுடியாமல் அங்கேயே நிற்கின்றன. இதனால் குவாரியில் மணல் அள்ளும்பணி பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News