செய்திகள்

சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் மனைவி பலி: ஓட்டல் அதிபர் தப்பினார்

Published On 2017-11-05 17:15 IST   |   Update On 2017-11-05 17:15:00 IST
மரத்தில் கார் மோதிய விபத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டல் அதிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு:

சத்தியமங்கலம் கடை வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). ஓட்டல் உரிமையாளர். இவரது மனைவி ஹேமலதா (40).

கணவன்- மனைவி 2 பேரும் நேற்று காலை காரில் கோவை சென்று பொருட்கள் வாங்கி கொண்டு மீண்டும் சத்தியமங்கலம் வந்தனர். சீனிவாசன் காரை ஓட்டி வந்தார். அவர்கள் நேற்று மாலை கோவை- சத்தியமங்கலம் மெயின் ரோடு சத்தி பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வந்தனர்.

அப்போது அந்த வழியாக எதிரே ஒரு லாரி வந்தது. அந்த லாரி மீது மோதாமல் இருக்க காரை சீனிவாசன் திருப்பினார். இதில் நிலை தடுமாறிய கார் ரோட்டோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது. இதில் கணவன்- மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கம் இருந்தவர்கள் சீனிவாசன்- ஹேமலதாவை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு கொண்டு சென்றனர்.

அங்கு ஹேமலதா சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். சீனிவாசன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சத்திய மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News