செய்திகள்

பெருந்துறை அருகே தேனீக்கள் கொட்டி 4 பேர் படுகாயம்

Published On 2017-11-04 18:57 IST   |   Update On 2017-11-04 18:57:00 IST
பெருந்துறை அருகே தேனீக்கள் கொட்டியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு:

பெருந்துறை அருகே உள்ள கராண்டிபாளையம் காட்டு வலசு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 77). விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (68).

இவர்களுடன் முத்துசாமியின் மகள் ராதாமணி (42), மருமகன் சண்முகம் (45) ஆகியோரும் வசித்து வந்தனர். சண்முகம் டயர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை முத்துசாமி மாடுகளை மேய்க்க அவிழ்த்து சென்றார். அப்போது அந்த பகுதியில் கூட்டில் இருந்து கலைந்த மலைத் தேனீக்கள் வட்டமிட்டது.

திடீரென அந்த தேனீக்கள் முத்துசாமியை கொட்டியது. இதில் அவர் காயம் அடைந்து சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அவரது மனைவி வள்ளியம்மாள், மகள் ராதாமணி, மருமகன் சண்முகம் ஆகியோர் அங்கு வந்தனர்.

அப்போது அந்த தேனீக்கள் வள்ளியம்மாள், ராதாமணி, சண்முகம் ஆகியோரையும் கொட்டியது. இதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News