செய்திகள்

கருங்கல்பாளையத்தில் பேன்சி கடை உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2017-11-03 22:11 IST   |   Update On 2017-11-03 22:11:00 IST
பேன்சி கடை உரிமையாளர் வீட்டின் கதவை கடப்பாறையால் நெம்பி திறந்து 10 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கிருஷ்ணம் பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரகுமான். சொந்தமாக பேன்சி கடை வைத்துள்ளார். கடை பக்கத்திலேயே இவரது வீடு உள்ளது. ரகுமானின் மாமியார் வீடு தாராபுரத்தில் உள்ளது. அவருக்கு உடல் நலம் சரியில்லாததால் ரகுமான் குடும்பத்துடன் தாராபுரம் சென்று விட்டார்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அவரது வீட்டு கதவின் பூட்டை கடப்பாறையால் நெம்பி திறந்து உள்ளே நுழைந்தனர். வீட்டில் 8 பீரோ இருந்தது. அந்த 8 பீரோவையும் மர்ம ஆசாமிகள் உடைத்து உள்ளே இருந்த துணி மணி மற்றும் பொருட்களை வாரி இரைத்தனர்.

இதில் ஒரு பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரகுமானுக்கு தகவல் கொடுக்கவே அவர் விரைந்து வந்தார். வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு திடுக்கிட்டார்.

இது குறித்து அவர் கருங்கல் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணரும் வந்து கை ரேகையை பதிவு செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

ஈரோடு திருநகர் காலனி பாலசுப்பிரமணி வீதியை சேர்ந்தவர் ரபீக். லெதர் வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது அலுவலகத்தின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோ லாக்கரை உடைத்தனர். ஆனால் பீரோவில் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த 2 சம்பவங்களிலும் ஒரே கொள்ளை கும்பல் தான் கை வரிசை காட்டி இருக்க கூடும் என கருதி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Similar News