செய்திகள்

கால்வாய் ஆக்கிரமிப்புகளால் முடிச்சூரில் மழை வெள்ளம் குறையவில்லை

Published On 2017-11-02 16:00 IST   |   Update On 2017-11-02 16:00:00 IST
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் வெளியே செல்ல முடியாமல் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
தாம்பரம்:

கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் சென்னை புறநகர் பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. குறிப்பாக தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

இன்று மழை இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழை நீர் செல்ல வழியில்லாமல் அப்படியே உள்ளது.

முடிச்சூர், வரதராஜபுரம், மகாலட்சுமி நகர், ராயப்பநகர், அமுதம் நகர், பி.டி.பி. காலனி, அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. முடிச்சூர் சாலையில் இன்னும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் வெளியே செல்ல முடியாமல் தேங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மழை நீர் அடையாறு ஆற்றில் கலக்க வசதியாக வரதராஜபுரம் அருகே வெளிவட்ட சாலையில் உள்ள கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கிடையே முடிச்சூர் பகுதியில் இன்றும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். அப்போது முடிச்சூர் பகுதியை தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தாம்பரம் சானட் டோரியத்தில் உள்ள வருவாய் கோட்ட அலுவலகத்தில் இன்று மதியம், வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

Similar News