செய்திகள்

வெள்ளத்தடுப்பு பணியை முன்கூட்டியே தொடங்கியிருக்கலாம்: முத்தரசன்

Published On 2017-11-01 09:48 IST   |   Update On 2017-11-01 09:49:00 IST
அரசின் அலட்சியப் போக்கால்தான் சென்னை மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்கால நடவடிக்கை மூலம் வெள்ளத் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என முத்தரசன் கூறினார்.
ஈரோடு:

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள ஈரோடு வந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை 27-ந்தேதியே தொடங்கும். கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால் முன்கூட்டியே அரசு தடுப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.

இப்போது பாருங்கள் ஒருநாள் மழைக்கே தாக்கு பிடிக்க முடியாமல் சென்னை நகரம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒருநாள் மழைக்கே இப்படி என்றால் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை நகரம் என்ன பாடுபட போகிறதோ?

அரசின் அலட்சியப் போக்கால்தான் சென்னை மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்கால நடவடிக்கை மூலம் வெள்ளத் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்.


ரேசன் சர்க்கரை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். தமிழக அமைச்சர்கள் கூறி வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகம் முழுவதும் கந்து வட்டி உள்ளது. ஏழை-நடுத்தர வர்க்கத்தினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுதான் வருகிறார்கள். வங்கிகளில் கடன் பெறுவதில் மக்களுக்கு ஏற்படும் சிக்கல்தான் இதற்கு காரணம். எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வங்கிகள் மூலம் உரிய கடன்களை வழங்க வேண்டும்.

மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. அறிவிக்கப்பட்ட வருகிற 8-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி கருப்பு தினமாக கடைபிடிக்கிறது. ஈரோட்டில் அன்று நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கலந்து கொள்கிறார். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Similar News