செய்திகள்

புதுவை சுதந்திர தினவிழா நாளை கொண்டாட்டம்: நாராயணசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்

Published On 2017-10-31 11:03 IST   |   Update On 2017-10-31 11:03:00 IST
புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் நாளை விடுதலை திருநாள் கொண்டாடப்படுகிறது. முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்குள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றுகிறார்.
புதுச்சேரி:

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திரமடைந்தது.

புதுவை மாநிலம் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால் நாடு சுதந்திரமடைந்தாலும் புதுவை மாநிலத்தின் பகுதிகள் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

இதனையடுத்து பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து புதுவையை மீட்க சுதந்திர போராட்டம் நடந்தது. போராட்டத்தின் முடிவில் கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி புதுவை மாநிலத்தை விட்டு பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறினர்.

இதனால் நவம்பர் 1-ந்தேதி புதுவை விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. புதுவை அரசு சார்பில் விடுதலை நாளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது.

புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் நாளை (புதன்கிழமை) விடுதலை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடற்கரை சாலை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு கொடி மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 8.55 மணிக்கு புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கடற்கரை சாலை காந்தி திடலுக்கு வருகிறார். அவரை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா வரவேற்கிறார்.

தொடர்ந்து மேடைக்கு செல்லும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்குள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றுகிறார். பின்னர் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொள்கிறார்.

புதுவை விடுதலைக்கு போராடிய தியாகிகளை கவுரவிக்கிறார். இதனை தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதனை மேடையில் இருந்தபடியே முதல்- அமைச்சர் நாராயணசாமி பார்வையிடுகிறார்.

இதனையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெறுகின்றன. விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

விழாவையொட்டி புதுவை கடற்கரை சாலையில் நாளை காலை முதல் இரவு வரை வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் போலீசார் குவிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Similar News