ஈரோடு ரெயிலில் பார்சல் வந்த செல்போன்களை திருடிய தந்தை-மகன் கைது
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் இடத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் 2 பேர் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்னர்.
அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பாகனை கோவிலை சேர்ந்த சுப்பிரமணி (வயது 63) மற்றும் அவரது மகன் சக்திவேல் (31) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 11 செல்போன்கள் இருந்தது. அந்த செல் போன்களை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த 7.8.17-ந் தேதி ரூ.3 லட்சம் மதிப்புள்ள 27 செல்போன்கள் ஒரு ரெயிலில் பார்சல் அனுப்பப்பட்டது. அந்த செல்போன் அனைத்தும் மாயமானது. அதை அவர்கள் கொள்ளையடித்ததாக தெரிவித்தனர். அதில் 11 செல்போன்களை தற்போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் தந்தை-மகன் ஈரோடு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.