செய்திகள்

சோத்துப்பாறை அணை அக். 15-ல் திறப்பு

Published On 2017-09-30 22:32 IST   |   Update On 2017-09-30 22:32:00 IST
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126 அடியை எட்டியதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
பெரியகுளம்:

தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரைக் கொண்டு 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொடைக்கானல் மற்றும் வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சோத்துப்பாறை அணை நீர் மட்டம் தனது முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதே போல் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர் மட்டமும் 55 அடியை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 3 நாட்களாக மஞ்சளாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணைக்கு நீர் வரத்து முற்றிலும் நின்று போனது. இருந்த போதும் குடிநீருக்காக வினாடிக்கு 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியுள்ளனர். அதன் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக முதல்வருக்கு அறிக்கை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அக்டோபர் 15-ந் தேதி தண்ணீர் திறந்து விட முடிவு செய்துள்ளதாகவும், அரசின் உத்தரவு கிடைத்தவுடன் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News