விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி: பெண்கள் மகிழ்ச்சி
ஈரோடு:
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை தக்காளி விலை கிலோ ரூ.60 வரை விற்பனையானது. கடும் வறட்சியால் தக்காளி வரத்து குறைந்து தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து இருந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் அதிகமானது. இதனால் காய்கறி விலைகள் குறைந் துள்ளது. குறிப்பாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, நசியனூர், காஞ்சிகோவில், பெருந்துறை, பள்ளபாளையம், மொடக்குறிச்சி, எழுமாத்தூர் போன்ற பகுதியில் இருந்து ஈரோடு மாநகரில் உள்ள மார்க்கட்டிற்கு தக்காளி வரத்தாகிறது.
முன்பு சந்தைகளுக்கு 750 கிலோ வரை மட்டுமே தக்காளி வரத்தானது.தற்போது விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி வரத்து 2 டன் முதல் 3 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.60-க்கு விற்ற தக்காளி கடந்த வாரம் ரூ.24-க்கு விற்றது. இந்த வாரம் ரூ.13 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது.
இது குறித்து தக்காளி வியாபாரி கூறும் போது, ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் ஈரோடு மட்டும் இன்றி கிருஷ்ணகிரி, தர்மபுரி,ஆந்திர மாநிலம் கடப்பா உள்ளிட்ட பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகமாக வருகிறது.
தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது கிலோ ரூ.15 வரை விற்பனையாகிறது என்றார்.
சமையலுக்கு முக்கியமான பொருளாக பயன் படுத்தப்படும் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து குறைந்த விலையில் விற்பதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.