செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: முதல்வர், சபாநாயகருக்கு நைட்டி, சேலை அனுப்பிய 8 பேர் கைது

Published On 2017-09-21 05:59 GMT   |   Update On 2017-09-21 05:59 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு தபாலில் நைட்டி, சேலை அனுப்பிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு மாவட்ட கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்க செயலாளர் ஜெகதீசன் தலைமையில் நிர்வாகிகள் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு வந்தனர்.

அவர்கள் ஸ்பீடு போஸ்ட் மூலம் முதல்-அமைச்சருக்கு நைட்டியும், சபாநாயகருக்கு சேலையும் அனுப்பும் நூதன போராட்டம் நடத்தினர்.

பெரும்பான்மையை இழந்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடாத சபாநாயகர் தனபால், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்.

இது ஜனநாயக படுகொலை ஆகும். இதை கண்டித்தும் மைனாரிட்டி அரசுக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமியையும் கண்டித்தும் இந்த போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 24-ந் தேதி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அவர்கள் முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு நைட்டி, சேலையை தபாலில் அனுப்பிவிட்டு சென்றனர். இந்த தகவல் கிடைத்து வந்த ஈரோடு டவுன் போலீசார் போராட்டம் நடத்திய கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்க கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகதீசன், தொண்டர் அணி அமைப்பாளர் சசி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மோகன், பவானி ஒன்றிய செயலாளர் சவுந்தர், செய்தி தொடர்பாளர் விவேக்ராஜ் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

அதன்பிறகு அந்த 8 பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தனர்.

Tags:    

Similar News