செய்திகள்

கல்லீரலை மாற்ற முடிவு: நடராஜனுக்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை- சசிகலா வேதனை

Published On 2017-09-12 10:20 GMT   |   Update On 2017-09-12 10:20 GMT
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதனால் சசிகலா வேதனை அடைந்துள்ளார்.
சென்னை:

சசிகலாவின் கணவர் நடராஜன் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து உடலில் உள்ள பாதிப்புகளை கண்டறிந்து வருகிறார்கள்.

சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளதால் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இன்றுடன் 3-வது நாளாக டயாலிசிஸ் தொடர்கிறது.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:-

நடராஜன் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மயக்க நிலை எதுவும் இல்லை. நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்.

உடல் பரிசோதனையில் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதும் நுரையீரலில் தண்ணீர் சேர்ந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கல்லீரல் கண்டிப்பாக மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது.

சிறுநீரக பாதிப்பை சீர் செய்ய முடியுமா? மாற்ற வேண்டுமா? என்பது தொடர் சிகிச்சையில்தான் தெரிய வரும். மருத்துவ குழுவினர் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.

தன் கணவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்த சசிகலா வேதனை அடைந்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், அவர் லிங்கத்துக்கு ஜல அபிஷேகம் செய்து கணவர் உடல்நலம் பெற வேண்டிக் கொண்டார். மனவேதனையுடன் இருக்கும் அவரை இளவரசி தேற்றி வருகிறார்.

இதற்கு முன்பு உறவினரான மகாதேவன் இறந்தபோது சசிகலாவுக்கு பரோல் கிடைக்கவில்லை. இதனால் தனது கணவரை பார்க்க பரோல் கேட்டால் கிடைக்காது என்பதால் அவர் சுப்ரீம் கோர்ட்டில் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News