மானாமதுரையில் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடியில் 2 மாத காலமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
கீழமேல்குடியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஒத்தக்கடை அருகே உள்ள வைகை ஆற்று பகுதியில் போர்வெல் போடப்பட்டு அங்கிருந்து பைப் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு கீழமேல்குடியில் குடி நீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2 மாத காலமாக குடிநீர் வராததினால் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், குடிநீர் எடுக்க சைக்கிளில் 10 கி.மீ. தூரம் சென்று குடிநீர் பிடித்து வருவதாகவும் முடியாதவர்கள் ஒரு குடம் ரூ.10 கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பி.டி.ஓ. சந்திரா கலெக்டரிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.