செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை

Published On 2017-08-31 12:26 GMT   |   Update On 2017-08-31 12:26 GMT
மேட்டுப்பாளையத்தில் ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் வீட்டில் கதவை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:

புதுவை மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வி.பி.சிங் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாகன தணிக்கை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பன்னீர் வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று காலை பன்னீர் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

யாரோ மர்ம நபர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டு திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. கொள்ளை போன நகை மற்றும் ரொக்க பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இதுகுறித்து பன்னீர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்தனர். தடய நிபுணர்கள் தடயங்களை சேகரிக்க வந்தனர். அப்போது கொள்ளையர்கள் தடயங்களை மறைக்க வீடு முழுவதும் ஈரத் துணியால் துடைத்து விட்டு சென்றுள்ளது தெரிந்தது. இதனால் தடயங்களை சேகரிக்க முடியாமல் தடயவியல் நிபுணர்கள் திகைத்து போய் நின்றனர்.
Tags:    

Similar News