செய்திகள்

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Published On 2017-08-30 16:04 GMT   |   Update On 2017-08-30 16:04 GMT
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி:

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த ஆண்டு ஆரம்பம் முதலே சீசன் போதுமானதாக இல்லை. அருவிகளிலும் இடைஇடையே தண்ணீர் அதிகமாக விழுவதும், பின்னர் குறைவாக விழுவதுமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது.

வழக்கமாக ஆகஸ்டு மாதம் 15-ந் தேதியுடன் குற்றாலம் சீசன் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட மாறுதலாக உள்ளது. அதாவது சீசன் காலங்களில் எல்லாம் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. சீசன் முடியும் தருவாயில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கடந்த 10 நாட்களாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலையில் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுந்தது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். குற்றாலம் வந்திருந்த குறைவான சுற்றுலா பயணிகளும் பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகியவற்றில் ஆனந்தமாக குளித்துச் சென்றனர். நேற்று இரவும் விடிய விடிய மெயினருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்தது.

இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து மெயினருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவி வருகிறது. சீசன் முடியும் தருவாயில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Tags:    

Similar News