செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு

Published On 2017-08-29 21:42 IST   |   Update On 2017-08-29 21:42:00 IST
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு உயர் அதிகாரிகள் கண்டிப்பாக வர வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை:

மாவட்ட தலைநகரங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் மாவட்ட, தாலுகா அளவிலான உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். இதனால் பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண முடியும். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து பதில் கூறப்படும்.

சிவகங்கை மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட லதா மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது துறை வாரியாக அதிகாரிகளை அழைத்தபோது பெரும்பாலான துறை உயர் அதிகாரிகள் வரவில்லை. மேலும் முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் குறித்து ஆய்வு நடத்தியபோது எவ்வித மனுக்கள் உள்ளது என்று கூட அலுவலர்கள் பதில் கூற முடியாமல் திணறினர்.

கலெக்டர் அவர்களிடம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அல்லது சம அந்தஸ்திலான அதிகாரிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். வரும் வாரம் முதல் காலை 10 மணிக்கு கூட்டத்திற்கு வரவேண்டும். 10.45 மணிக்கு கூட்டம் தொடங்கும்.

எனவே மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை அல்லது எதனால் தாமதம் என்பதை தெரிவிக்க வேண்டும். முதல்வர் தனிப்பிரிவு மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும். அதுகுறித்த பதிவேட்டை கொண்டுவர வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

புதிய கலெக்டரின் அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்றனர்.

Similar News