செய்திகள்

தொழில் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கு திறனாய்வு போட்டிகள்: கலெக்டர் தகவல்

Published On 2017-08-24 21:49 IST   |   Update On 2017-08-24 21:49:00 IST
இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் திறனாய்வு போட்டிகள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும், மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட அளவில் திறனாய்வு போட்டிகள் வருகிற 15–ந்தேதிக்குள் 3 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.

பிரிவு 1–ல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி படித்த பட்டதாரிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழில் பழகுனர்கள் கலந்து கொள்ளலாம். 2–வது பிரிவில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் கலந்து கொள்ளலாம். பிரிவு 3–ல் குறுகிய கால பயிற்சி பெற்ற திறமையானவர்கள், செய்முறை அனுபவம் பெற்ற சுயவேலைவாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த திறனாய்வு போட்டிகளில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்திட வேண்டும்.

3 பிரிவுகளில் சிறந்த பொருட்கள் மற்றும் படைப்புகளை தனித்தனியாக தேர்வு செய்து, பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பின்னர் இந்த போட்டிகளில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் மாநில திறனாய்வு போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும். அதன்படி மாநிலத்தில் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், தகுதி சான்றிதழும் வழங்கப்படும். 2–ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.

எனவே இந்த திறனாய்வு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் போட்டிகள் குறித்த விவரங்களை சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News