செய்திகள்

அ.தி.மு.க.வின் குடுமிபிடி சண்டையால் தமிழக அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது: வைகோ

Published On 2017-08-18 10:00 IST   |   Update On 2017-08-18 10:01:00 IST
அ.தி.மு.க.வின் குடுமிபிடி சண்டையால் தமிழக அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது என புதுக்கோட்டையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் கட்சிகள் மட்டுமல்ல பொதுமக்களும் கூறி வந்த நிலையில் அவரின் இறப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷனை தமிழக அரசு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.


இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கி நினைவிடமாக மாற்ற போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளதும் வரவேற்கக்தக்கது. ‘நீட்‘ தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிரந்தரமாக தடை வாங்க முடியாவிட்டாலும், இந்த ஒரு ஆண்டாவது விலக்கு கேட்டு முயற்சி எடுத்து வருகிறது.

இதற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது அவரின் தொழில் தர்மம். ஆனால் வெளியில் அவர் நீட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க.வின் குடுமிப்பிடி சண்டையால் தமிழக அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News