செய்திகள்

புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி

Published On 2017-08-13 22:56 IST   |   Update On 2017-08-13 22:56:00 IST
புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் கீரமங்கலம் பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள அணவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது  மனைவி ஜெயந்தி. இவர்கள் தற்போது கொத்தமங்கலத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு சித்தார்த் (வயது 4) என்ற மகன் இருந்தான்.

கடந்த சில நாட்களாக சித்தார்த்துக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் கொத்தமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் காய்ச்சல் குணமாகாததால், சித்தார்த்தை மேல்சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் சித்தார்த் பரிதாபமாக இறந்தான். டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் கீரமங்கலம் பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News