செய்திகள்

தமிழகத்துக்காக கேட்டது எதுவும் கிடைக்கவில்லை: பா.ஜ.க. தலைவர்கள் மீது அ.தி.மு.க. திடீர் பாய்ச்சல்

Published On 2017-07-26 07:40 GMT   |   Update On 2017-07-26 07:40 GMT
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுடன் நட்பு பாராட்டி வந்த அ.தி.மு.க. தற்போது பா.ஜ.க. தலைவர்கள் மீது வசைப்பாடும் வகையில் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் வெளியான கவிதை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்த அ.தி.மு.க. அணிகள் போட்டி போட்டுக் கொண்டு மத்திய அரசை ஆதரித்து வருகின்றன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவே ஓட்டளித்தனர். மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கும் தமிழக அரசு கட்டுப்படுகிறது.

ஆனால் தமிழக அரசின் எதிர்பார்ப்புகள் எதுவும் பூர்த்தியாகவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. கச்சத்தீவில் தொடங்கி ஹைட்ரோ கார்பன் திட்டம் வரையில் தமிழக அரசின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்காமலேயே இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.



இந்த நிலையில் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. பா.ஜனதா தலைவர்களை கடுமையாக சாடி உள்ளது. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தும் தமிழகம் கேட்டது எதுவும் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தை அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியுள்ளது.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா மற்றும் குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடு ஆகியோர் மீதும் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை பாய்ந்துள்ளது.

இது தொடர்பாக அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

கச்சத்தீவு


கச்சத்தீவை தாரை வார்த்து கடல்சார் உரிமை இழந்தோம்!
காவிரியை மீட்பதற்கு காலமெல்லாம் முயன்றோம்!
முல்லையாற்று உரிமைக்கு மோதிச் சண்டை புரிந்தோம்!
பாலாறும் கோளாறாக பரிதவித்து நின்றோம்!
மேகதாதில் சூது சூழ மேலும் துன்பம் கண்டோம்!
மீத்தேன் வந்து அச்சுறுத்த மீளாத்துயரில் உழன்றோம்!
நெடுவாசல் துயரலே நிம்மதியை இழந்தோம்!
கதிராமங்கலம் கண்ணீர் துடைக்க கரங்கள் தேடி அலைந்தோம்!
கீழடியின் பெருமை காக்க காலடியில் விழுந்தோம்!
ஈழத் துயரை தடுக்க முடியாம இயலாமையில் அழிந்தோம்!
‘உதய்’யை ஒப்புகிட்டு ஒத்துழைப்பு தந்தோம்!
சேவை மற்றும் சரக்கு வரிக்கு சேர்ந்து கோஷம் புரிந்தோம்!

நீட் தேர்வு

‘நீட்’டுக்கும் தலைவணங்கி நெருக்கடியில் நெளிந்தோம்!
‘எய்ம்ஸ்’  மருத்துவமனை எப்போது வரும்னு எதிர்பார்ப்பில் கரைந்தோம்!
வர்தா புயல் நிதிக்கு கையேந்தி வழிபாத்துக் கிடந்தோம்!
வறட்சி நிவாரணம் வருமான்னு விழிபிதுங்கி நடந்தோம்!
கேட்டது எதுவும் கிடைக்கல.... கெட்டது எதுவும் விலகல...

தமிழிசை - எச்.ராஜா

வெங்கய்யா வந்து விடுகதை சொல்ல....
பொன்னார் வந்து புதுக்கதை சொல்ல....
தமிழிசை வந்து தனிக்கதை சொல்ல...
எச்.ராஜாவோ ‘ஆண்ட்டி இண்டியன்’னு ஆவேசம் கொள்ள....
ஆளுக்கு ஆளு இலவசமா அறிவுரைகள் அள்ள...
கூடவே கழகங்களில்லா தமிழகம்னு கலர் கலரா கனவுகளில் காவிகள் துள்ள...
கன்னித் தமிழ் பூமியின் கோப அலையை திசை திருப்ப

காதல் கிழவரசன்

காதல் கிழவரசனோ கழக அரசைப் பழித்து கதைகள் பல சொல்ல...
மாற்றாந்தாய் போக்கை வெல்ல மன்றாடுது தமிழுலகம்!
மதியாலே சதியை வெல்ல மக்கள் சக்தியே துணையென்று மார் தட்டுது கழகம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News