செய்திகள்
குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் தாய் பிரியா

2 மாத பெண் குழந்தையை ரூ.1500-க்கு விற்ற தொழிலாளி

Published On 2017-07-17 18:03 IST   |   Update On 2017-07-17 18:03:00 IST
சிதம்பரம் அருகே வறுமை காரணமாக 2 மாதகுழந்தையை ரூ.1500-க்கு விற்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்:

சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள மருதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன்(வயது 32). தொழிலாளி. இவரது மனைவி பிரியா(31). இவர்களுக்கு கவுசல்யா(5), கவுசிகா(2 மாதம்). ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

செந்தாமரைக்கண்ணன் குடும்பம் வறுமையில் வாடியது. 2 பெண் குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் தவித்தார். இதனால் ஒரு குழந்தையை விற்க முடிவு செய்தார். நேற்று மாலையில் செந்தாமரைக்கண்ணன் குடிபோதையில் வீட்டில் இருந்த 2 மாத பெண் குழந்தை கவுசிகாவை தூக்கிக்கொண்டு சிதம்பரம் பஸ்நிலையத்துக்கு வந்தார்.

அங்கிருந்த சீர்காழியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தனக்கு 2 பெண் குழந்தை உள்ளது. எங்கள் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டுள்ளதால் என்னால் இந்த குழந்தையை வளர்க்க முடியவில்லை. இந்த குழந்தையை நீங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

பின்னர் செந்தாமரைக்கண்ணன் அந்த பெண்ணிடம் அந்த குழந்தையை ஒப்படைத்துவிட்டு ரூ.1500 பெற்றுக்கொண்டு சென்றார். குழந்தையை விலைக்கு வாங்கிய அந்த பெண் பஸ்நிலையத்தில் இருந்த ஒரு கடைக்காரரிடம் குடிபோதையில் ஒருவர் என்னிடம் இந்த குழந்தையை வளர்க்குமாறு கூறிச்சென்றார்.

இதனால் குழந்தையை தேடி யாராவது வந்தால் எனது வீட்டு முகவரிக்கு வரும்படி கடைக்காரரிடம் கூறிச்சென்றார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த குழந்தை காணாதது கண்டு பிரியா அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்கு வந்த கணவர் செந்தாமரைக்கண்ணனிடம் குழந்தையை காணவில்லை குழந்தையை பார்த்தீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர் குழந்தையை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

இதனைத்தொடர்ந்து பிரியா சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சிதம்பரம் பஸ்நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள கடைக்காரர் ஒருவர் போலீசாரிடம் கூறும்போது, ஒரு பெண் குழந்தையை வாங்கிச்சென்றது குறித்தும் அந்த பெண் கொடுத்த முகவரியையும் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சீர்காழியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ரூ.1500-ஐ கொடுத்து குழந்தையை வாங்கியதாக அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து சிதம்பரம் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் அந்த குழந்தையை மீட்டு குழந்தையின் தாயார் பிரியாவிடம் ஒப்படைத்தார்.

மேலும் குழந்தையை விற்ற செந்தாமரைக்கண்ணனை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வறுமை காரணமாக 2 மாதகுழந்தையை ரூ.1500-க்கு விற்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News