செய்திகள்

எம்எல்ஏ வீடியோ விவகாரம்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு

Published On 2017-06-19 21:19 IST   |   Update On 2017-06-19 21:19:00 IST
எம்எல்ஏ வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி ரூபாய் கை மாறியதாக செய்திகள் வெளியானது. இதுபற்றி மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேட்டியளித்ததாக ஒரு ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஆனால் தான் அவ்வாறு கூறவில்லை என்று சரவணன் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த பிரச்சனையை சட்டசபையில் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் வற்புறுத்தி வருகிறார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆதாரம் இல்லாமல் எதைப் பற்றியும் சபையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் அறிவித்து விட்டார். இதனால் ஆதாரத்தை தர தயாராக இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தும் சபையில் பேச அனுமதிக்கப்படவில்லை.

இந்த சூழலில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவை சென்னை ராஜ்பவனில் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 17-ம் தேதி சந்தித்தார். அவருடன் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் சென்றனர்.

அப்போது, எம்.எல்.ஏ.க்களுக்க பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக தனது கருத்துக்களை ஆளுநரிடம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி உள்ளார். 

மேலும், குதிரை பேரத்தில் நடத்தப்பட்ட, நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்துவிட்டு ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 



இந்நிலையில், எம்எல்ஏ வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று உத்தரவிட்டுள்ளார். ஸ்டாலின் அளித்த குதிரை பேர விவகாரம் தொடர்பான அறிக்கையையும்,சி.டியையும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அவர் அனுப்பினார்.

Similar News