புவனகிரியில் அரசு பஸ் உடைப்பு: விடுதலை சிறுத்தை கட்சியினர் 5 பேர் கைது
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள முள்ளிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 38). விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர். இவர் புவனகிரி மத்திய ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று செந்திலின் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தை கட்சியினர் வந்திருந்தனர். அவர்கள் புவனகிரி பஸ்நிலையத்திற்குள் சென்று கடைகளை அடைக்கும்படி வியாபாரிகளிடம் கூறினர்.
இதனால் வியாபாரிகள் அவசரமாக அவசரமாக கடைகளை மூடினர். அப்போது புவனகிரி பஸ்நிலையத்துக்குள் வந்த அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறிஅடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர்.
அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து டிரைவர் ராஜரத்தினம் புவனகிரி போலீசில் புகார் செய்தார். அதனைத்தொடர்ந்து சிதம்பரம் கூடுதல் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்பேரில் புவனகிரி இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பஸ்சை உடைத்ததாக சிதம்பரத்தை சேர்ந்த சிவக்குமார்(35), மாரி என்ற மாரிவளவன்(27), கிளியனூரை சேர்ந்த சிவக்குமார்(36), சிதம்பரத்தை சேர்ந்த பெருசரித்திரன்(28), பாண்டி என்ற ராமச்சந்திரன்(44) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து புவனகிரியில் பதட்டம் நிலவி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.