செய்திகள்

பாக்கெட் பாலில் ரசாயனம் கலந்திருப்பது பரிசோதனையில் உறுதி ஆனது: அமைச்சர் அறிவிப்பு

Published On 2017-05-27 08:33 IST   |   Update On 2017-05-27 09:22:00 IST
தனியார் பால் பாக்கெட்டுகளில் ரசாயன பொருட்கள் கலந்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் பால் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, நிருபர்களிடம் கூறும்போது, தனியார் பால் பாக்கெட்டுகளில் பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.

இந்தநிலையில், தனியார் பால் பாக்கெட்டுகளில் ரசாயன பொருட்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

தனியார் பால் நிறுவனங்கள் பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பல்வேறு ரசாயன பொருட்களை கலப்பதாக குற்றம்சாட்டி இருந்தேன். இதையொட்டி, தனியார் பால் பாக்கெட்டுகளை மாதவரம் பால் பண்ணையில் ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதன் பரிசோதனை முடிவு தற்போது வெளிவந்துள்ளது. அதில், ரசாயன பொருட்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று புனே மற்றும் கிண்டியில் உள்ள ஆய்வகங்களில் நடைபெற்ற பரிசோதனை முடிவுகளையும் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ரசாயன பொருட்கள் கலந்த பாலை உபயோகப்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே பொதுமக்களின் உயிரோடு விளையாடும் தனியார் பால் நிறுவனங் களை மூடுவதற்கு முதல்-அமைச்சருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News