செய்திகள்

ஆன்லைனில் வாங்கிய டி.வி. பழுதானதால் ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு: நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-04-28 15:40 IST   |   Update On 2017-04-28 15:40:00 IST
காஞ்சிபுரம் அருகே ஜீவானந்தம் என்பவர் ஆன்லைனில் வாங்கிய டி.வி. பழுதானதால் ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்ககோரி நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (47). விவசாயி.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆன் லைன் மூலம் 19,500 ரூபாய் மதிப்புள்ள டி.வி.யை வாங்கியுள்ளார். 4½ மாதத்தில் அதில் பழுது ஏற்பட்டது.

இதனால் ஜீவானந்தம் காஞ்சீபுரம் மேட்டு தெருவில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு சென்று முறையிட்டுள்ளார். அவர்கள் 10 நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனர்.

பின்னர் சில நாட்களுக்கு பின் ஜீவானந்தத்தை தொடர்பு கொண்ட அவர்கள் டிவியை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். டி.வி.யை கொண்டு சென்ற ஜீவானந்த்திடம் புதிய பேனல் மாற்ற 13,000 ரூபாயை கேட்டுள்ளனர். அதற்கு அவர் டி.வி.க்கு ஒருவருடம் வாரண்டி உள்ளது. எனவே நான் பணம் தரமுடியாது என கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள் ஆன்லைனில் வாங்கினால் வாரண்டி கிடையாது என கூறியுள்ளனர். இதனால் மனஉச்சலுக்கு ஆளான அவர் ஆன்லைன் நிறுவ னத்தின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கூறிய தற்கு அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. பலநாள் அலைகழிப்பிற்கு பின்னர் பழுதுநீக்க ரூ. 7 ஆயிரம் செலுத்துமாறு கூறி யுள்ளனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அவர் 19.9.2016 அன்று செங்கல் பட்டில் அமைந்துள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் நிறுவனமும், டிவி. சர்வீஸ் சென்டரும் தனக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்காக 2 லட்சமும், வழக்கு செலவாக ரூ. 25 ஆயிரமும் வழங்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த வழக்கினை விசாரணை செய்த மாவட்ட நுகர்வோர் குறை தீர்மன்ற நீதிபதிகள் சிவானந்த ஜோதி, பாபு வரதராஜன் ஆகியோர் இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கினர்.

தீர்ப்பில் ஜீவானந்தத்திற்கு ஆன்லைன் நிறுவனம் மற்றும் சர்வீஸ் சென்டர் ஆகியோர் தனித் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து டி.வி. வாங்கியதற்கான தொகை 19,500 ம் வழக்கு செலவிற்காக ரூ. 10 ஆயிரமும், வாடிக்கையாளருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ. 20 ஆயிரம் ரூ. 49 ஆயிரத்து 500-ஐ 2 மாத காலத்திற்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

தவறும்பட்சத்தில் தொகை முழுவதற்கும் உத்தரவு வழங்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தப்படும் காலம் வரை ஆண்டிற்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென உத்தரவில் தெரிவித்தனர்.

Similar News