செய்திகள்

மயிலாப்பூர் கோவில் அருகே கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு - மறியல்

Published On 2017-04-28 15:12 IST   |   Update On 2017-04-28 15:13:00 IST
மயிலாப்பூர் கோவில் அருகே கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவான்மியூர்:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெற்கு மாட வீதியில் உள்ள சித்திரைகுளம் அருகே 300-க்கும் மேற்பட்ட பழம், பூ, காய்கறி கடைகள் உள்ளன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இன்று காலை அங்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருக்கிறது என்று கூறி கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பொருட்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். திடீரென்று அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது வியாபாரிகள் கூறும்போது, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். திடீரென்று கடைகளை அகற்ற சொன்னால் என்ன நியாயம். இதை நம்பிதான் நாங்கள் வாழ்கிறோம். கடைகளை அகற்றினால் மாநகராட்சி முன்பு தீக்குளிபோம்” என்றனர்.

அவர்களிடம் அதிகாரிகள், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News