செய்திகள்

தமிழகத்தில் திட்டமிடப்பட்ட நாடகம் அரங்கேற்றப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2017-04-18 12:40 IST   |   Update On 2017-04-18 12:40:00 IST
அ.தி.மு.க.வில் இப்போது நடைபெறும் சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகமாகவே கருதுகிறேன் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று அறப்போராட்டம் நடந்து வருகிறது. தாய்மார்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும்.

அ.தி.மு.க.வில் இப்போது நடைபெறும் சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகமாகவே கருதுகிறேன். இரு அணிகளும் எதற்காக பிரிந்தனர்? என கூற முடியவில்லை. இப்போது எதற்காக இணைகிறார்கள் என்றும் சொல்ல முடியாது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறினார். முதல்-அமைச்சராக இருந்தபோது 2 பிரச்சனைகள் குறித்து விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்றார். ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக ஒரு விசாரணை கமி‌ஷனும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க மற்றொரு கமி‌ஷனும் அமைக்கப்படும் என்றார்.

ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதாக இருந்தால் முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர் ஓ.பன்னீர் செல்வம் தான் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார். இப்போது இரு அணியினரும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மர்மம் இருப்பதாக கருதுகிறேன். ஒரு திட்டமிட்ட நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள். பிரிந்தவர்கள் இணைந்தால் உண்மைகள் மூடி மறைக்கப்பட வாய்ப்புள்ளது.


அ.தி.மு.க.வினர் அச்சத்தின் காரணமாகவே இணைவதாக கருதுகிறேன். எனவே ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இதுவே அ.தி.மு.க. தொண்டர்களின் அனைவரது விருப்பமாக உள்ளது.

முறைகேடு எங்கெங்கு நடந்துள்ளது என்பதை அறிந்து அங்கு தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவார்கள். தமிழக அரசியல் கட்சியினருக்கு நெருக்கடி கொடுத்து ஆதாயம் தேட வேண்டிய அவசியம் பாரதிய ஜனதாவுக்கு இல்லை.

இப்போதைய அ.தி.மு.க. ஆட்சி நியாயமாக இல்லை. மிகவும் மோசமாக நடக்கிறது. தமிழக மக்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று எண்ணுகிறார்கள். இதுபோல தேர்தல் ஆணையத்தையும் வாங்க நினைப்பது தமிழகத்துக்கு ஏற்பட்ட வெட்கக் கேடு.

இரட்டை இலையை மீட்டாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை.

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் பின்னணியில் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் சில உள்ளன. விவசாயிகளை நான் 5 முறை சந்தித்து பேசி உள்ளேன். உள்துறை மந்திரி, நிதி துறை மந்திரி ஆகியோரையும் போராட்டக்காரர்கள் சந்தித்துள்ளனர். இருந்தாலும் அவர்கள் நடத்தும் சில போராட்டங்கள் ஏற்கத்தக்கதல்ல.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்தே போட்டியிடும். மற்ற கட்சியினர் தனித்து போட்டியிடுவார்களா? என்று கேட்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News