செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக போராட்டம்

Published On 2017-04-13 12:18 GMT   |   Update On 2017-04-13 12:18 GMT
ராஜாக்கமங்கலம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று 4-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

நாகர்கோவில்:

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் 59 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறக்க நடவடிக்கை எடுத்தனர். பல்வேறு இடங்களில் கடைகளை திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆயத்த பணி நடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி அருகே கல்லுவிளை, தக்கலை அருகே கீழக்கல்குறிச்சி பகுதியில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜாக்கமங்கலம் அருகே காக்காதோப்பு பகுதியிலும் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.

இன்று 4-வது நாளாக போராட்டம் நடந்தது. போராட்டத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கேயே கஞ்சி காய்ச்சினர்.இன்று கலெக்டரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதேபோல தக்கலை கீழக்கல்குறிச்சி பகுதி மக்களும் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பிரச்சினை இருந்து வரும் நிலையில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் டாஸ்மாக் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Similar News