செய்திகள்

ராதிகா அலுவலகத்தில் ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

Published On 2017-04-12 03:02 GMT   |   Update On 2017-04-12 03:03 GMT
நடிகை ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ் அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்த வேளையில், சரத்குமாரிடமும் மீண்டும் விசாரணை நடத்தினர்.
சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி சார்பில் தலா ரூ.4 ஆயிரம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அளித்த அடுக்கடுக்கான புகாரை தொடர்ந்து தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி அன்று, ஒரே நேரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், ரூ.6 கோடி ரொக்கப் பணமும், பல முக்கிய ஆவணங்களும் வருமான வரித்துறை அதிகாரிகள் வசம் சிக்கியது. ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் வழங்கியதற்கான ஆவணமும் இதில் அடக்கம்.



இந்த நிலையில், நேற்று திடீரென நடிகை ராதிகாவுக்கு சொந்தமான சென்னை தேனாம்பேட்டை ஜெயம்மாள் சாலையில் உள்ள ராடன் மீடியா ஒர்க்ஸ் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

காலை 11 மணிக்கு அங்கு சென்ற 6 அதிகாரிகள் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது, நடிகை ராதிகா அங்கு இல்லை. அவர், ‘வாணி - ராணி’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்காக சென்னை புறநகர் பகுதிக்கு சென்றிருந்தார். எனவே, சோதனை குறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

ராடன் அலுவலகத்தில் சோதனை தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில், மாலை 3 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 2 பேர் கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். ராடன் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் சில சரத்குமார் பெயரிலும் இருப்பதால் அவரிடம் இந்த விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்ததும், சரத்குமாரையும் அழைத்துக்கொண்டு அவரது காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். சரத்குமாரை அவர்கள் ராடன் நிறுவன அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சில விளக்கங்களை அவரிடம் கேட்டனர்.



அதன்பின்னர், வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, “நேற்று (10-ந் தேதி) என்னிடம் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். இன்றைக்கும் (நேற்று) விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன். ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவன வங்கி கணக்குகள் என் பெயரிலும், என் மனைவி ராதிகா பெயரிலும் இருக்கிறது. எனவே, அதுகுறித்து நான் விளக்கம் அளித்தேன்” என்றார்.

வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணைக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி செல்லவில்லை. மாறாக, கோர்ட்டுக்கு சென்றுவிட்டார். தன்னுடைய வீட்டில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படாதபோது விசாரணைக்கு நான் எதற்காக செல்ல வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால், அவரது மனு நேற்று தள்ளுபடி ஆனது.

எனவே, அவர் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிகிறது.


Similar News