செய்திகள்
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார். சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் நடந்து சென்றபோது மர்ம ஆசாமி ஒருவர் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1200-ஐ பறித்து சென்றார். இதுகுறித்து செந்தில்குமார் ஜெய்ஹிந்த் புரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெய்ஹிந்த்புரம் தேவர் நகர் பாரதியார் ரோட்டை சேர்ந்த முத்துக்காமு (வயது43) என்றும், இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 16 வழக்குகள் உள்ளது எனவும் தெரியவந்தது.
ஜாமீனில் வெளியே வந்த முத்துக்காமு, பின்னர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தநிலையில், வழிப்பறியில் ஈடுபட்டு சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.