செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி

Published On 2017-04-06 15:37 IST   |   Update On 2017-04-06 15:37:00 IST
தென் தமிழகத்தின் 16 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டு என்று கிருஷ்ணசாமி கூறினார்.

மதுரை:

புதிய தமிழகம் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசினார். நிர்வாகிகள் பன்னீர் செல்வம், தெய்வம், மருதம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். முன்னதாக கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் தமிழகத்தின் 16 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என போராடி வருகிறோம். எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு அமைந்தால் தென் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயனடைவார்கள்.

தூத்துக்குடியில் நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். 8-ந் தேதி மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ஆர்.கே. நகரில் பிரதான கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகிறது. எனவே தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.


தமிழகத்திற்கு நீட் தேர்வு அவசியம். இங்கு மைல் கற்களில் இந்தியில் எழுதுவது போல மற்ற மாநிலங்களில் உள்ள மைல் கற்களில் தமிழை எழுத வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News