செய்திகள்

சட்டசபைக்கு ஓரளவு மட்டுமே அதிகாரம் உள்ளது: கவர்னர் கிரண்பேடி

Published On 2017-04-06 04:39 GMT   |   Update On 2017-04-06 04:39 GMT
புதுவை முழுமையான மாநிலம் இல்லை. சட்டசபைக்கு ஓரளவு மட்டுமே அதிகாரம் உள்ளது என கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே நேரடியாக மோதல் ஏற்பட்டுள்ளது.

கவர்னர் கிரண்பேடியின் ஆதரவு அதிகாரியான நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரனை சபாநாயகர் வைத்திலிங்கம் காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிஜா நடைமுறைப்படுத்தினார். புதிய ஆணையாளராக கணேசன் நியமிக்கப்பட்டார்.

அதிகாரிகள் மாற்றல் விவகாரத்தில் அமைச்சர்கள் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் என்று கவர்னர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதோடு தன்னுடைய ஒப்புதல் பெறாமல் நகராட்சி ஆணையாளரை மாற்றிய தலைமை செயலாளரின் உத்தரவை ரத்து செய்தார். இதனால் நகராட்சி ஆணையாளராக மீண்டும் சந்திரசேகரன் பொறுப்பு ஏற்றார்.

இதனையடுத்து தனது உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட ஆணையாளர் கணேசனுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சந்திரசேகரன் நகராட்சி அலுவலகம் வருவதை நிறுத்தினார்.

அதோடு புதுவை துணைநிலை ஆளுனர் பதவி என்பது அரசியல் அமைப்பு ரீதியான பதவி அல்ல என்று சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும் மாநில கவர்னருக்கான அதிகாரம் துணைநிலை ஆளுனருக்கு கிடையாது என்றும், ஆனால் சபாநாயகர் அதிகாரம் பொதுவானது என்றும் கூறினார். இதனால் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.


இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி புதுவை சட்டசபைக்கு ஓரளவே அதிகாரம் உள்ளது என்று கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் என்ன தவறு செய்கிறேன் என்பதை மத்திய அரசிடம் போய் ஆட்சியாளர்கள் தெரிவிக்கட்டும். வேலை செய்வதை தவறு எனக் கூறுகின்றனர். திட்டங்கள் தொடர்பாக கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட முடியுமா?

நேர்மையாக பணி செய்வது தவறாகுமா? பணி விதிகளை அவர்கள் நன்றாக படித்து பார்க்கட்டும். நிர்வாகிக்கான அதிகாரங்கள் குறித்து நீண்ட பட்டியல் உள்ளது. நிதி, அதிகாரிகள் நியமனம், பணி மாற்றம் குறித்து அதிகாரங்கள் தெளிவாக உள்ளன. யாருக்கும் நான் எந்த ஆதாயத்தையும் அளிக்கவில்லை. இது, முழு மாநிலம் இல்லை. சட்டப் பேரவைக்கு ஓரளவுதான் அதிகாரம் உள்ளது.

இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

Similar News