செய்திகள்

தேர்தல் கமி‌ஷனால் கண்காணிப்பது கடினம்: முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கருத்து

Published On 2017-03-16 10:24 GMT   |   Update On 2017-03-16 10:24 GMT
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கண்காணிப்பது சாத்தியமற்றது என்று முன்னாள் தலைமை தேர்தல் கமி‌ஷனர் என். கோபால்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெற தேர்தல் கமி‌ஷன் முக்கிய பங்கு வகித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு போட்டியிடுவதாக கருதப்படும் தீபா தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கண்காணிப்பது சாத்தியமற்றது என்று முன்னாள் தலைமை தேர்தல் கமி‌ஷனர் என். கோபால்சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

தேர்தலில் ஊழல் நடைபெறுவதை தடுப்பது தேர்தல் கமி‌ஷனுக்கு எளிதான பணியல்ல. பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்துவது இயலாத ஒன்றாகும். ஏனென்றால் தொகுதியில் கட்சிகளின் ஏஜெண்டுகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

ஒவ்வொரு 50 ஓட்டுக்கும் ஒரு ஏஜெண்டை கட்சிகள் நியமிக்கின்றனர். பணம் கொடுக்கும் நபருடன் அவர் தொடர்பில் இருப்பார். கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்காளர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆயிரம் ஏஜெண்டுகள் இருப்பார்கள். இதனால் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஒவ்வொருவரையும் கண்காணிப்பது தேர்தல் கமி‌ஷனால் இயலாது. இது சாத்தியமற்றது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஊழல் தடுப்பு அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேர்தலில் பணம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஓட்டுக்கு ஆயிரம் வழங்கப்படுகிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெற இது அதிகமாக பயன்படுத்தப்படும்” என்றார்.

Similar News