செய்திகள்

அ.தி.மு.க. சட்ட மன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி பயோடேட்டா

Published On 2017-02-14 10:22 GMT   |   Update On 2017-02-14 10:22 GMT
அ.தி.மு.க. சட்ட மன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் முழு விபரம்...
சேலம்:

அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி கே.பழனிச்சாமி (வயது 64) சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்.

இவரது தந்தை பெயர் கருப்பா கவுண்டர், தாயார் பெயர் தவசியம்மாள். எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கோவிந்தராஜ் என்ற சகோதரரும் உள்ளார்.

எடப்பாடி கே.பழனிச்சாமியின் மனைவி பெயர் ராதா. இந்த தம்பதிக்கு மிதுன் குமார் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் திருமணம் ஆகி மனைவியுடன் வசித்து வருகிறார்.

தொடக்க காலத்தில் சிலுவம்பாளையம் கிளை செயலாளராக அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் எடப்பாடி கே.பழனிச்சாமி. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் 1989-ம் ஆண்டு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று இரு அணியாக அ.தி.மு.க. செயல்பட்டது.

அப்போது ஜெயலலிதா அணி சார்பில் போட்டியிட்ட எடப்பாடி கே.பழனிச்சாமி தி.மு.க. வேட்பாளர் எம்.பழனிச்சாமியை தோற்கடித்து முதல் முறையாக எடப்பாடி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் 1991, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளிலும் எம்.எல்.ஏ.வாக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதில் 2011-ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவியேற்ற அவர் தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

ஏற்கனவே திருச்செங்கோடு தொகுதியில் ஒரு முறை எம்.பி.யாகவும் அவர் பதவி வகித்தார். மேலும் கட்சியின் மிக முக்கிய பதவியான தலைமை நிலைய செயலாளர் பதவியையும் தற்போது வரை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News