செய்திகள்

மகளை பதிவு திருமணம் செய்து கொண்டதால் கோவை என்ஜினீயரை வெட்டிய மாமனார்

Published On 2017-01-30 14:12 GMT   |   Update On 2017-01-30 14:13 GMT
காரமடை அருகே மகள் பதிவு திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த தந்தை கோவை என்ஜினீயரை வெட்டியதால் போலீசார் அவரை கைது செய்தனர்.

கோவை:

கோவை மாவட்டம் காரமடையை அடுத்த குட்டையூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 29). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கும் காரமடை ஈ.பி.காலனியை சேர்ந்த தேவராஜன் என்பவரது மகள் தமீளாவுக்கும் (24) இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. தமீளா, கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே மகள் தமீளா , சீனிவாசனை பதிவு திருமணம் செய்து கொண்ட தகவல் சீனிவாசனுக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் தமீளா, சீனிவாசனுடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரின் தந்தை தேவராஜ் மற்றும் சகோதரர் தங்கமுத்து ஆகியோர் பதிவு திருமணம் செய்து கொண்டது பற்றி விசாரித்தனர். அப்போது தமீளா, சீனிவாசனை திருமணம் செய்து கொண்டதை ஒப்பு கொண்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த தேவராஜன், தமீளாவை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார்.

உடனே அவர் அங்கிருந்து புறப்பட்டு நேராக சீனிவாசன் வீட்டுக்கு சென்றார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற தேவராஜன், தங்கமுத்து ஆகியோர் அங்கு நின்ற சீனிவாசனை அரிவாளால் வெட்டினர். பினனர் 2 பேரும் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டனர்.

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சீனிவாசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்ப்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக காரமடை போலீசார் வழக்குபதிவு செய்து தேவராஜனை கைது செய்தனர். தப்பி ஓடிய தங்க முத்துவை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Similar News