செய்திகள்

அந்தியூர் அருகே அரசு பஸ் மீது கல் வீச்சு: பயணி மண்டை உடைந்தது

Published On 2017-01-24 19:34 IST   |   Update On 2017-01-24 19:34:00 IST
அந்தியூர் அருகே அரசு பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதில் பஸ்சில் இருந்த பயணி ஒருவரது மண்டை உடைந்தது.
அந்தியூர்:

பவானியில் இருந்து அந்தியூர் வந்து பிறகு அங்கிருந்து மலை கருப்பசாமி கோவிலுக்கு நேற்று இரவு அரசு டவுன் பஸ் வந்தது.

இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சரவணக்குமார் ஓட்டி சென்றார். ஜெகதீஸ்வரன் கண்டக்டராக இருந்தார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த பஸ் செம்புளிச்சாம் பாளையம் அருகே முருகன் கிணறு பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர்.

பிறகு திடீரென அவர்கள் பஸ்சின் பின்புறம் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்தது. பின்புற சீட்டில் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணியின் மண்டையில் கற்கள் தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இந்த தாக்குதலால் பஸ்சில் இருந்த பயணிகள் நிலை குலைந்து போனார்கள். டிரைவர் பஸ்சை நிறுத்தினார். கல் தாக்கியதில் படுகாயம் அடைந்த பயணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கல் வீசி தாக்கிய மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பிறகு பஸ்சில் இருந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Similar News