செய்திகள்
போராட்ட களத்தில் பங்கேற்ற பள்ளி சிறுவர்களுக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அன்பு முத்தமிட்ட காட்சி

ஈரோட்டில் 6-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

Published On 2017-01-22 16:25 IST   |   Update On 2017-01-22 16:25:00 IST
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும் பீட்டாவை நிரந்தரமாக வெளியேற வேண்டும் எனவும் ஈரோட்டில் 6-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு:

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும் பீட்டாவை நிரந்தரமாக வெளியேற வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மாணவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய-மாநில அரசுகள் அறிவித்தாலும், “இது ஏமாற்று வேலை ஏதோ ஒப்புக்கு சப்பாணி போல் அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டியது இல்லை, எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு தங்கு தடையின்றி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மாணவ- மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதே போராட்டத்தை முன் வைத்து ஈரோடு வ.உ.சி. திடலில் போராட்டம் நடத்தி வரும் மாணவ-மாணவிகள் இன்று 6-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் காலையில் இருந்தே பெருங்கூட்டம் தொடர்ந்தது.

இன்றும் புதிய உற்சாகத்துடன் மாணவ- மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ- மாணவிகள் கூறும்போது, “இந்த அவசர சட்டம் ஏமாற்று வேலைங்க ஒரு வாரமாக போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்துக்கு இதுதான் தீர்வா? இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு தேவை நிரந்தர சட்டம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்று எங்களது பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு அலங்காநல்லூரில் தடையின்றி நடக்க வேண்டும்” என்று கூறினர்.

Similar News