செய்திகள்

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு கிருஷ்ணா தண்ணீர் இன்றிரவு வரும்

Published On 2017-01-16 08:08 GMT   |   Update On 2017-01-16 08:08 GMT
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு கிருஷ்ணா தண்ணீர் இன்று இரவு வந்து சேரும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் 2 மாதங்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

இதனை ஏற்று கடந்த நவம்பர் 21-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு டிசம்பர் 11-ந் தேதி நிறுத்தப்பட்டது.

இந்த இடைபட்ட நாட்களில் 0.99 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. அதன்பின் மீண்டும் தண்ணீர் திறந்து விடும்படி பொதுப் பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 9-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு பின்னர் படிப் படியாக தண்ணீர் திறப்பு அதிகரித்தது.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று நேற்று கூடுதலாக 520 கனஅடி தண்ணீர் பூண்டிக்கு திறந்து விடப்பட்டது. தற்போது மொத்தம் வினாடிக்கு 1700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கபடுகிறது.

இந்த தண்ணீர் இன்று காலை 8 மணி நிலவரப்படி கண்டலேறு அணையில் இருந்து 140 வது கிலோ மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருந்தது.

இன்னும் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு இன்று இரவு வந்து சேரும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் நீர்மட்டம் 22. 86 அடியாக பதிவானது. 560 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து மெட்ரோ வாட்டர் போர்டுக்கு பேபி கால்வாயில் 21 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Similar News