செய்திகள்

தூக்க மாத்திரை கொடுத்து தண்ணீரில் மூழ்கடித்து மகனை கொன்ற தந்தை

Published On 2017-01-11 12:21 IST   |   Update On 2017-01-11 12:21:00 IST
ஈரோட்டில் வறுமை காரணமாக மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தந்தை தற்கொலைக்கு முயன்றபோது உயிர் தப்பினார்.
ஈரோடு:

ஈரோடு குமலன்குட்டை செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மருந்துக்கடை தொழிலாளி. இவரது மனைவி பெயர் ரேவதி. மகன் சரண் (வயது 16).

சரண் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

ரமேஷ் சரியாக வேலைக்கு போகாமல் இருப்பாராம். மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வேலைக்கு சரியாக போகாததால் அவரை வறுமை வாட்டியது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரமேஷ் தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று இரவு 8.30 மணியளவில் மனைவி வெளியே போன சமயம் தற்கொலைக்கு முயன்றார். அப்போது தான் இறந்த பிறகு மகனும் கஷ்டப்படக்கூடாது என எண்ணிய அவர் மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்தார். சிறிது சேரத்தில் மயங்கிய அவனை படுக்க வைத்தார்.

பிறகு தானும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டார். அதன் பிறகு மகன் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக பாத்ரூமில் உள்ள தண்ணீர் தொட்டியில் மகன் சரணை படுக்க வைத்து இரக்கமின்றி தண்ணீர் குழாயை திறந்து விட்டார்.

பிறகு தூக்க மாத்திரை சாப்பிட்ட ரமேசும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். இதற்கிடையே தண்ணீர் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தனர். அங்கு ரமேஷ் மயங்கி கிடந்ததையும் சரண் தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் மாணவர் சரண் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரமேசுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News