செய்திகள்
தற்கொலை செய்த விவசாயி பழனிச்சாமி

கவுந்தப்பாடி அருகே கரும்பு-மஞ்சள் கருகியதால் விவசாயி தற்கொலை

Published On 2017-01-10 16:27 IST   |   Update On 2017-01-10 16:27:00 IST
பயிர்கள் கருகியதால் மனம் உடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கவுந்தப்பாடி மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வேலம்பாளையம் ஓடமேட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது45). இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், சசிஆனந்த் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

விவசாயி பழனிசாமிக்கு 4 ஏக்கர் நிலமும் 2 கிணறும் உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதியில்உள்ள இவரது விவசாய நிலத்தில் 6 மாதத்துக்கு முன் கரும்பும் மஞ்சளும் சாகுபடி செய்திருந்தார். அந்த பயிர்களும் நன்கு வளர்ந்து இருந்தது. வாய்க்காலில் எப்படியும் தண்ணீர் வரும் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் மழை சுத்தமாக இல்லாததால் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை.

மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போனதால் கிணற்றிலும் தண்ணீர் இல்லை.

இதனால் பழனிச்சாமி மிகவும் வேதனையுடன் இருந்தார். விவசாயி பழனி சாமி ஒருவங்கியிலும் கடன் பெற்று டிராக்டர் வாங்கி இருந்தார். இந்த கடனை அவரால் கட்டமுடியவில்லை. பணம் கட்டியே தீர வேண்டும் என்று கூறியதால் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார்.

மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் விவசாயக்கடன் பெற்றிருந்தார். மேலும் ஒரு வங்கியில் லோன் மூலம் கறவை மாடுகளும் வாங்கி இருந்தார்.

இந்த கடன்களையெல்லாம் கட்டமுடியாமல் அவதிப்பட்டார். மேலும் கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து நெருக்கடி கொடுத்ததால் மனஉளைச்சலும் அடைந்தார்.

இந்த நிலையில் நன்கு வளர்ந்திருந்த கரும்பு பயிர்கள் தண்ணீர் இன்றிமுற்றிலும் அழிந்தது. மஞ்சள் பயிர்களும் கருகியது. மற்றவர்களிடம் இதுபற்றி கூறி மிகவும் வருத்தப்பட்டார்.

இந்த நிலையில் விவசாயி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைகண்ட அவரது மனைவி மகன் மற்றும் உறவினர்கள் கதறிஅழுதனர். இதுபற்றி கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பயிர்கள் கருகியதால் மனம் உடைந்த விவசாயி பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கவுந்தப்பாடி மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News