செய்திகள்

பொங்கல் விழாவுக்கு கட்டாய பொது விடுமுறை: சசிகலா வலியுறுத்தல்

Published On 2017-01-09 16:52 GMT   |   Update On 2017-01-09 16:52 GMT
பொங்கல் விழாவுக்கு கட்டாய பொது விடுமுறையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

மத்திய அரசின் கட்டாய விடுமுறை தினங்கள் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை நீக்கியிருக்கிறது. நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும், பொங்கல் திருநாளை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பொங்கல் விழாவுக்கு பொது விடுமுறையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் திருவிழா ஜாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கலை சேர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Similar News