திண்டிவனம் அருகே தீயில் கருகி தொழிலாளி பலி
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மரமாங்கனி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 45) கூலித்தொழிலாளி. இவர் நேற்று நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது மின் கசிவு காரணமாக அவரது குடிசையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த சேகர் வீட்டில் இருந்து வெளியே வரமுயன்றார். அவரது முயற்சிக்கு பலன் இல்லை. தீயில் கருகிய அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபாயக்குரல் எழுப்பினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். அதற்குள் வீடு தீ பற்றி எரிந்தது. இதில் சேகர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஒலக்கூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் கருகி இறந்த கேசருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் ஒரு மகளும் 2 மகன்களும் உள்ளனர்.
கோவிந்தம்மாள் வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மகன்கள் 2 பேரும் சென்னையில் கட்டிட வேலை செய்து வருகின்றனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.