செய்திகள்

பணத்தட்டுப்பாடு பிரச்சினையை கண்டித்து கோவையில் உண்ணாவிரதம்

Published On 2016-12-30 10:12 GMT   |   Update On 2016-12-30 10:12 GMT
மத்திய அரசை கண்டித்தும் கோவை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி சார்பில் இன்று வடகோவை பவர் ஹவுஸ் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கோவை:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து கோவையில் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. 100 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு காரணமாக ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே புதிய ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்று அறிவிக்க வேண்டும், பணத்தட்டுப்பாட்டை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்தும் கோவை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி சார்பில் இன்று வடகோவை பவர் ஹவுஸ் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் கோவிந்தராஜன், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

பொதுச்செயலாளர் ஜெகநாதன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொது செயலாளர் மீனாட்சி சுப்பிரமணியன், தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன துணை தலைவர் கந்தவேல் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.

போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கை விளக்க நோட்டீசுகளை பொதுமக்களிடம விநியோகம் செய்தனர்.

இதற்கிடையே பழைய நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால் வங்கிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே போல் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பூட்டியே கிடக்கிறது.

Similar News