செய்திகள்

வேதாரண்யத்தில் சம்பா சாகுபடியை பாதித்த களைகள்: விவசாயிகள் வேதனை

Published On 2016-12-28 16:00 IST   |   Update On 2016-12-28 16:10:00 IST
வேதாரண்யத்தில் பயிர்களில் அதிகப்படியான களைகள் மண்டிக் கிடப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்காவில் தலைஞாயிறு, கரியாப்பட்டினம், வாய்மேடு, மருதூர், ஆயக்காரன்புலம், கத்தரிப்புலம், செம்போடை, தாணிக்கோட்டகம் உள்ளிட்ட ஆற்றுப்பாசன மற்றும் மானாவாரி பகுதியில் 24 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி நேரடி நெல்விதைப்பாக செய்தனர்.

ஆற்றுப்பாசன பகுதிகளில் காவேரி நீர் வராததாலும் மானாவாரி பகுதிகளில் போதிய பருவ மழை பெய்யாததாலும் சம்பா சாகுபடிகள் கருகத் தொடங்கின. பல இடங்களில் பயிர் போதுமான வளர்ச்சி இல்லாததால் இனி சம்பா பயிரை காப்பாற்ற முடியாத நிலையில் அதிர்ச்சியடைந்து 7 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பல இடங்களில் தங்கள் சாகுபடி செய்த வயல்களில் ஆடு, மாடுகளை கட்டி மேய்க்கத் துவங்கி உள்ளனர். இந்நிலையில் ஒருசில இடங்களில் ஓரளவு வளர்ந்துள்ள பயிர்களில் அதிகப்படியான களைகள் மண்டிக் கிடக்கின்றன. வரிகீரை, வரகுபுல், அமளை கோரை போன்ற களைகள் பயிரை விட அதிகமாக மண்டிக் கிடக்கின்றன.

வழக்கமாக மழை பெய்து சாகுபடி நன்றாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு களை எடுப்பதற்கு 15 முதல் 18 ஆட்கள் ஆகும். ஆனால் தற்போது மண்டிக்கிடக்கும் களையை எடுப்பதற்கு ஏக்கருக்கு 60 முதல் 75 ஆட்கள் ஆகிறது. இதனால் ஒருசில இடங்களில் சிறிது களையை எடுத்துவிட்டு மேலும் களை எடுக்க பணம் இல்லாமல் வயலை அப்படியே விட்டுவிட்டனர்.

ஓரளவு வளர்ந்த பயிரை காப்பாற்றுவதற்கு போராடும் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையினர் தகுந்த ஆலோசனை கூறி களைகளை கட்டுப்படுத்தும் முறையினையும் இருக்கும் பயிரை காப்பாற்றுவதற்கும் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News