செய்திகள்

பண்ருட்டி அருகே மாணவன் கொலை வழக்கில் வியாபாரி கைது

Published On 2016-12-26 09:59 GMT   |   Update On 2016-12-26 09:59 GMT
பண்ருட்டி அருகே மாணவன் கொலை வழக்கில் வியாபாரி கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் வியாபாரி அளித்த வாக்குமூலம் குறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பம் காலனியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன ஜெயபிரகாஷ்(15). என்.எல்.சி. பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஜெயபிரகாஷ் கடந்த 23-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அதே பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் நடைபெற்ற தகராறில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த வியாபாரி பழனியப்பனை வலைவீசி தேடிவந்தனர்.

கடலூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு முரளீதரன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை முடுக்கிவிட்டனர். கொலையாளியை கைது செய்ய தனிப்படை அமைத்தனர்.

தனிப்படை போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இன்று அதிகாலை பண்ருட்டியிலிருந்து முத்தாண்டிக்குப்பம் செல்லும் வழியில் பழைய பிள்ளையார்குப்பம் அருகே பதுங்கியிருந்த பழனியப்பனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மாணவனை கொன் றது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அந்த வாக்கு மூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் முத்தாண்டிக்குப்பம் கடை வீதியில் பெட்டிக் கடை வைத்துள்ளேன். இந்த கடையில் அடிக்கடி திருட்டு நடைபெற்றது வந்தது.

ஏராளமான பணம், பொருட்கள் திருட்டு போயின. எனது கடையில் திருடும் நபரை கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 22-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு பின்பக்க வழியாக உள்ளே பதுங்கியிருந்தேன்.

23-ந் தேதி அதிகாலை முத்தாண்டிக்குப்பம் காலனியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற வாலிபர் கடையில் உள்ளே புகுந்து திருட முயன்றார். அவரை கையும் களவுமாக பிடித்தேன்.

என்னிடமிருந்து தப்பி ஓட முயற்சி செய்த போது அவர் என்னை தாக்கினார். நான் தற்காப்புக்காக அருகிலுள்ள கத்தியை எடுத்து அவரை தாக்கினேன். படுகாயம் அடைந்த ஜெயபிரகாஷ் உயிர் இழந்தார்.

இவ்வாறு அந்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

மாணவன் கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கொலையாளியை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்ட பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளீதரன், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் தனிப்படை போலீசாருக்கு கடலூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார்.

Similar News