அரிமளத்தில் வங்கி மேலாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
அரிமளம்:
அரிமளத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தினம்தோறும் பணம் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ரூ 2ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை பணம் பெற்று செல்கின்றனர்.
வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம். மையம் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பூட்டி கிடப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.யில் பணம் எடுக்க முடிய வில்லை. நீண்ட நேரம் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்கசெல்லும் போது வங்கியில் பணம் தீர்ந்து போய்விட்டது. நாளை வாருங்கள் என சில நாட்கள் திருப்பி அனுப்பபடுகின்றனர். இதனால் மக்கள் தங்களுடைய தேவைக்கு பணம் பெற முடியாமல் சிரமம் படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று வங்கியின் வாடிக்கையாளர் சோமு என்பவர் பணம் எடுக்க வங்கிக்கு சென்று உள்ளார். அப்போது எனது வங்கி கணக்கில் ரூ 50 ஆயிரம் உள்ளது. எனக்கு மத்திய அரசு கூறியது போல் ரூ.24 ஆயிரம் பணம் தாருங்கள் என கேட்டு உள்ளார்.
அதற்கு வங்கி மேலாளர் பணம் ரூ.4 ஆயிரம் தான் கொடுக்க முடியும் போய் வரிசையில் நில் என்று ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
பணம் 24 ஆயிரம் தர முடியாது என எழுதி தாருங்கள் என சோமு கேட்டு உள்ளார். மீண்டும் வங்கி மேலாளர் பாலசந்திரன் ஒருமையில் பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வங்கியில் பணம் எடுக்க காத்திருந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளர் பாலசந்திரனை முற்றுகையிட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த அரிமளம் போலீசார் பொதுமக்களை சமாதானம்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது ஒரு இளைஞர்க்கும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காஜாமொய்தீன் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.